காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது தலிபான் அரசு… புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் கட்டக்கூடாது என்றும் இப்போது எங்காவது ஜன்னல்கள் இருந்தால், அத்தனையையும் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஆப்கனில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் ஒவ்வொன்றாக விதித்தபடியே உள்ளனர்.. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, தனியாக வெளியே நடமாடக்கூடாது, அப்படியே வீட்டை விட்டு செல்வதானாலும் ஆண்களின் துணையின்றி செல்லக்கூடாது.
பெண் குழந்தைகள்: பெண் குழந்தைகளுக்கு உயர்நிலை பள்ளிகளில் அனுமதி மறுப்பு, தொடக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக வகுப்புகள், பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக செல்ல வேண்டும். தம்பதிகள் ஒரே குடும்பத்தினராக இருந்தாலும் இணைந்து பூங்காவுக்கு செல்லகூடாது. ஆண் டாக்டர்களிடம் பெண்கள் சிகிச்சைக்கு செல்லக்கூடாது, விமான பயணங்களிலும் ஆண், பெண், தனித்தனி பயணம் மேற்கொள்ள வேண்டும் என தாலிபன்களின் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்தபடி உள்ளன.
இப்படியான கட்டுப்பாடுகள் இல்லாமல், புதிய சட்டங்களும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, இஸ்லாமியர் அல்லாதவர்களுடன் நட்பாக பழகக்கூடாது. அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது, மனைவியாக இருந்தாலும் கூட, இயற்கைக்கு மாறான உறவு வைத்து கொள்ளக்கூடாது, உயிருள்ள எதையும் போட்டோ எடுக்கவும்கூடாது, சோஷியல் மீடியாவில் வெளியிடவும் கூடாது என்ற விதிகளும் திணிக்கப்பட்டுள்ளன. சட்டங்கள்: நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையிலேயே, இத்தகைய சட்டங்களை அமலுக்கு கொண்டுவந்துள்ளதாக தாலிபன்கள் சொன்னாலும், உலக நாடுகளிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
அதிரடி உத்தரவு: அந்த உத்தரவில், “பெண்கள் வீட்டின் சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதைப் பார்ப்பது அல்லது கிணற்றில் இருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது குற்றச் செயலாகும். அதனால் நாட்டில் புதிதாக கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறை, அண்டை வீட்டாரின் கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் கட்டக்கூடாது. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் மேற்கூறிய இடங்களில் உள்ள ஜன்னல்களை சுவர் எழுப்பியோ அல்லது அதை பார்க்க முடியாத வகையில் தடை செய்யவோ வேண்டும். இதனை வீட்டு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் அண்டை வீட்டாருக்கு ஏற்படும் தொல்லைகளைத் தவிர்க்கலாம்” என்றும் தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அறிவித்திருக்கிறார்.