சியோல்: தென்கொரிய அதிபர் மீது அதிருப்தி எழுந்திருக்கும் நிலையில், அவரை பதவி நீக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் திருப்தி இல்லை என அந்நாட்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். வழக்கமாக வடகொரிய செய்திகள்தான் அதிகம் பேசுபொருளாக இருக்கும். ஆனால் தற்போது தென்கொரியாவிலிருந்து பஞ்சாயத்துகள் கிளம்பியுள்ளன.
என்ன பஞ்சாயத்து?: தென்கொரிய அதிபர் யூன், சமீபத்தில் பேசிருந்த கருத்துக்கள் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், அவரை அதிபர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இருப்பினும் தென்கொரிய நாட்டின் சட்டத்தின்படி, அதிபரை பதவி நீக்கும் இறுதி முடிவை அரசியலமைப்பு நீதிமன்றம்தான் எடுக்க வேண்டும். இந்த நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பு தற்காலிக அதிபராக உள்ள ‘ஹான் டக் சூ’ வசம் உள்ளது.
ஆனால் மனுஷன், நீதிபதிகளை நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார். டென்ஷனான நாடாளுமன்றம் அவருக்கு எதிராகவும் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்டால் அது நிறைவேற்றப்படும். இப்போது வரை 192 ஆதரவு ஓட்டுகள் பதிவாகியுள்ளன. எனவே தற்காலிக அதிபர் எப்போது நடையை கட்டுவார் என்று எதிர்பார்ப்பு அந்நாட்டு மக்களிடையே எழுந்திருக்கிறது.
பிரச்னையின் தொடக்கம்: இவை எல்லாவற்றிற்கும் தொடக்கம் ராணுவ சட்டம் எனும் அறிவிப்புதான். அதிபர் யூன், சில நாட்களுக்கு முன்னர் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார். இதற்கு காரணமாக வடகொரியாவை கைகாட்டியிருந்தார். வடகொரிய ஆதரவாளர்கள், தென்கொரிய அரசுக்கு எதிராக தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த செயல்பாடுகள் தற்போது தீவிரமடைந்திருப்பதால் வேறு வழியில்லாமல் ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.
ராணுவ சட்டம் என்ன சொல்கிறது?: நெருக்கடி காலங்களில் மட்டுமே ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால், தென்கொரியாவில் பல முறை இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் பொதுமக்களின் உரிமைகளில் தலையீடு செய்கிறது. ஒன்று கூடுதல், பேசுதல், கருத்து தெரிவித்தல், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை இந்த சட்டம் முடக்குகிறது. தவிர, ஊரடங்கு போன்ற உத்தரவுகளும் ராணுவ சட்டத்தின் மூலம் பிறப்பிக்கப்படும். மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை, ராணுவ நீதிமன்றமே கையில் எடுத்து விசாரிக்கும்.
இவை அனைத்துமே ஜனநாயக நாட்டில் சர்வாதிகார செயல்பாடுகள் என்பதால் தென்கொரிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையடுத்து அதிபர் தனது அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டார். பொதுவெளியில் மன்னிப்பும் கோரியிருந்தார். ஆனாலும் அவர் மீதான எதிர்ப்பை, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டன.
தற்போது அதிபர் யூன் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. வழக்கமாக வடகொரியாவில் இருந்து வரும் தகவல்கள்தான் பெரிய அளவில் பூதாகரமாக பேசப்படும். ஆனால் தென்கொரியாவில் இவ்வளவு பெரிய அரசியல் நிலையற்ற தன்மை நிலவுகிறது என்பது முதன் முறையாக விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
சர்வதேச அரசியலை பொறுத்தவரை தென்கொரியா அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சார்ந்து இருக்கிறது. வடகொரியா, சீனா, ரஷ்யா பக்கம் நிற்கிறது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா 11,000 வீரர்களை அனுப்பி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.