சுவிசில் இன்று முதல் முகத்தை மறைக்கும் உடை உடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது !

சுவிசில் இன்று முதல் முகத்தை மறைக்கும் உடை உடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது !

இன்று முதல் சுவிஸ்சர்லாந்தில், முகத்தை மறைக்கும் ஆடைகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்லப் போனால், முஸ்லீம்கள் அணியும் உடைகளுக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்தச் சட்டம் எதற்காக அமுலுக்கு வருகிறது என்பது தொடர்பாக, சுவிஸ் அரசு தெளிவாக எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இருப்பினும் சட்டம் அமுலுக்கு வருவதாக மட்டுமே அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து என்பது உலகின் மிக அழகான நாடாக போற்றப்படுகிறது. இது ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும். சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை பூலோகத்தின் சொர்க்கம் என்று கூறுவார்கள். இங்கு தலைநகரம் என்று எதுவும் இல்லை.எனினும் நிர்வாக அலுவலகங்கள் எல்லாம் பெர்ன் நகரில் இருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டின் பொருளாதார மையங்களாக ஜெனீவா மற்றும் சூரிச் ஆகிய நகரங்கள் திகழ்கின்றன. சுவிட்சர்லாந்து உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும், வாழ்வாதாரம், வாழ்க்கை சூழல், கல்வி என எல்லாவற்றிலும் முன்னேறிய நாடாக உள்ளது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிப்பது குறித்து கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடையை அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று பெரும்பாலானோர்(51 சதவீதம்) ஆதரித்தார்கள். இதையடுத்து, இது தொடர்பாக அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் 6ம் தேதி புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அந்த சட்டம் 2025 ஜனவரி 1ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.